
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி, சுதாகரை அவினேஷ் சரமாரியாக வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரக்கோணம் டவுன் போலீசார் அவினேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில், 9 நாட்களுக்கு முன்பு, அவினேஷ் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நிபந்தனைப்படி, அவர் கடந்த 8 நாட்களாக தினமும் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.
நேற்று, வழக்கம்போல் பஸ்சில் அரக்கோணத்திலிருந்து ரத்தினகிரி வந்து, மேம்பாலம் அருகில் இறங்கி, கோயில் பிரதான வளைவு வழியாக காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, அவரை தொடர்ந்து கவனித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், அந்த 5 பேரும் கத்திகளுடன் நேரடியாக ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.