
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனையைச் சேர்ந்த அர்ஜுன் நம்பியார், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு கைத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நவல்பட்டு போலீசார், அவரது வசம் இருந்த நாட்டு கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வேட்டையாடுவது தங்கள் குல தொழிலாக இருப்பதால், செல்போனில் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக அர்ஜுன் நம்பியார் கூறியுள்ளார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நவல்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.