லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

A youth has been arrested for sexually harassing a school student who had asked for a lift.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுதியிலிருந்து வெளியே வந்த அவர், சொக்கம்பாளையம் பகுதியில் சோமனூர் செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டார்.

அந்த நபர், மாணவனை சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர், மாணவன் மறுத்ததால் அவரை மரக்கட்டையால் தலையில் தாக்கினார். அதனால் மாணவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாலையில் கிடந்தார்.

அந்த வழியாகச் சென்றவர்கள் மாணவனை மீட்டு சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மாணவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிசிடிவி பதிவுகள் மூலம் நபரை அடையாளம் கண்டனர். அவர் கோடாங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என தெரியவந்தது. விசாரணையில், மாணவனை கருமத்தம்பட்டி வழியாக சோமனூரில் உள்ள மதுக்கடைக்கு அழைத்து சென்று, மதுபானம் அருந்திய பிறகு ஆள் நடமாட்டமற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தாக்குதலில் மாணவனுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டதால் தாடை உடைந்தது. இதற்கான பிளாஸ்டிக் சர்ஜரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று, தற்போது மாணவர் ஓரளவு குணமடைந்து இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.