நடுரோட்டில் காதலனை அறைந்த இளம்பெண்: கோவையில் பரபரப்பு! ​

"Young woman slaps boyfriend on public road, causes commotion in Coimbatore."

திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிய காதலனை இளம் பெண் கன்னத்தில் அறைந்த சம்பவம், கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமின் முடிவில் மக்கள் கூட்டம் கலைந்த போது நடைபாதையில் இளம் காதல் ஜோடி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் காதலி, மிகவும் ஆத்திரமான நிலையில் காதலனின் கன்னத்தில் அறைந்து காதலனை தாக்கியுள்ளார்.

அதனைக் கண்டு பொதுமக்கள் நேரடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, இருவரையும் உடனடியாக தடுத்துள்ளனர்.

விசாரணையில், வடவள்ளியைச் சேர்ந்த அந்த பெண், திருப்பூர்–அவிநாசிபாளையத்தை சேர்ந்த தனது காதலனுடன் 9 மாதமாக தனியாக ஒரு வீடெடுத்து தங்கி குடும்பம் நடத்தியதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இப்போது ஏமாற்றுகிறான் என்று கூறியுள்ளார்.மேலும், “காதலின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வந்தால் தான்  போவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் இருவரையும் சமாதானம் செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக  இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.