திருமணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை — உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

"Young woman dies by suicide six months after marriage; family protests and refuses to collect the body demanding justice."


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். அவரது மகள் ஜெமலா (26) பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்தவர். இளம்பெண் ஜெமலா இனயம்புத்தன்துறையை சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஜெமலா, நிதின் ராஜுடன் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரியில் வசித்து வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு நிதின் ராஜ் வேலை இல்லாமல் இருந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஜெமலா நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி, நிதின் ராஜ் உறவினர்கள் ஜெமலாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே விரைந்து சென்று கருங்கல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, ஜெமலாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெமலாவின் தாயார் புஷ்பலதா அளித்த புகாரில், திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணம், 50 பவுன் நகை மற்றும் வீட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், திருமணத்துக்கு 2 மாதங்களிலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் ஜெமலாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு நீதிக்காக கோஷமிட்டனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.