
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் வசித்து வந்த அஷ்வினி என்பவர், கடந்த 24ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக தாக்கினர். தாக்குதலால் கடுமையாக காயமடைந்த அஷ்வினி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
தகவலறிந்து அஷ்வினியின் உடலை பெற்றுக்கொள்ள மருத்துவமனை வந்த உறவினர்கள், “நகைக்காக என் தங்கை உயிரிழந்தாள்… ஆனால் இந்தக் கொலையாளிகளை 5 நாட்களாகவும் கைது செய்யவில்லையே?” எனக் கதறி போலீசாரிடம் வாதாடினர்.
மேலும், அஷ்வினியின் மரணத்திற்கு காரணமான நபர்களை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி, பொன்னேரிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோதும், “நீதி கிடைக்கும் வரை உடலை எங்களால் வாங்க முடியாது” என உறவினர்கள் உறுதிபடக் கூறினர்.
8 சவரன் நகைக்காக இளம் பெண் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.