
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா (வயது 35).
காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு, சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் இடையே வயல் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் விவகாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி கிருத்திகா, கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜோதிவேல், அவரிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிருத்திகா, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் இதுகுறித்து கிருத்திகா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே சமயம் ஜோதிவேலும், சிவக்குமார் ஆகிய தம்பதியும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள் .
இருவரது புகாரும் விசாரிக்கப்படும் நிலையில், கிருத்திகாவை விசாரணைக்கு வருமாறு எஸ்ஐ சஞ்சீவி அழைத்துள்ளார்.
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு சென்ற கிருத்திகாவிடம், “உனக்கு எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன்… ஆனா நீ எனது ஆசைக்கிணங்கணும். இல்லையானா, உன் மனுவை விசாரிக்காம அலைக்கழிப்பேன்,” என எஸ்ஐ சஞ்சீவி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருத்திகா, அழுதபடியே வீட்டிற்கு திரும்பி, வெளி மாநிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கணவர் சிவக்குமாருக்கு இந்த விவரங்களை செல்போனில் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கிருத்திகா திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் எஸ்ஐ சஞ்சீவி நடந்து கொண்டது குறித்து கிருத்திகா பேசும் வீடியோ, சுமார் 2 நிமிட நீளத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விவகாரம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், எஸ்ஐ மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்துக் காத்திருக்கப்படுகிறது.