
நீட் தேர்வு விலக்கு குறித்து நடைபெற்ற சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்விற்கு எதிராக சட்டப் போரட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்,போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு விலக்கு என்ற பெயரில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி தொடர்ந்து நாடகம் ஆடுவதாக அதிமுக,பாஜக கட்சிகள் விமர்சித்துள்ளன, மேலும் முதல்வர் தலமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தையும் இக்கட்சிகள் புறக்கணித்தன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் சட்டப் போராட்டம் பலன் அளிக்க வாய்ப்புள்ளதா?
சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீட் விலக்கு பெறுவதற்கு உதவுமா? என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம்.
2021 சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு விலக்கு என்ற வாக்குறுதியை தி.மு.க பிரதானமாக முன் வைத்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த வாக்குறுதி உந்து சக்தியாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் நீட் தேர்வு தொடர்பாக ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி, ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இந்த மசோதாவை நிராகரித்துவிட்டார்.
இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆனால் குடியரசு தலைவரும் இந்த மசோதாவை நிராகரிக்கரித்துவிட்டார்.
மேலும் இந்த மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்திருந்த நிலையில், அதையும் ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டதாக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீட் தேர்வு என்பது ஏதோ விலக்கு முடியாத தேர்வு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இறக்கிறது. நமது சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தால், நீட் தேர்வில் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.” என கூறினார்.
கூட்டத்தை புறக்கணித்த அதிமுக,பாஜக
இந்த கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டார்.அதில் ‘நீட் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு செய்யப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக. இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
“இந்தக் கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை. மேலும் “இந்த கூட்டம் ஒரு நாடகம்” எனவும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை முன்வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது X பக்கத்தில் திமுக அரசை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
ரவிக்குமார் எம்.பி
தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் குறித்து விழுப்புரம் தொகுதி எம்,பி ரவிக்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நீட் தேர்வை சட்ட ரீதியாக தடுப்பது கடினம் எனக் கூறியுள்ளார்..
“பொதுப்பட்டியலில் கல்வி உள்ளது. இதன்பேரில் சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அது தான் செல்லுபடியாகும் என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 254(1) கூறுகிறது” என்றார்.
நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாலும், அதில் திருத்தம் செய்வதற்கோ, ரத்து செய்வதற்கோ ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நீட் தேர்வு தொடர்பாகவும் அப்படியொரு தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்க முடியாது. பொதுப் பட்டியலில் கல்வி இருக்கும் வரை இதை சட்டரீதியாக தடுப்பது கடினம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் மாற்று தீர்வு ஒன்றையும் ரவிக்குமார் எம்.பி முன்வைக்கிறார். நீட் தேர்வின் மூலம் சமமான வாய்ப்பு மறுக்கப்படுவது தொடர்பாக நீதிபதி பொன்.கலையரசன் ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளை அவர் குறிப்பிட்டார்.
“அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் கிராமப்புற பள்ளிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு உள்பட பல அம்சங்களை ஆணையம் தெரிவித்திருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு பொன்.கலையரசன் கமிட்டி பரிந்துரை செய்தது” எனக் கூறுகிறார் ரவிக்குமார்.
பொன்.கலையரசன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
“இதை 10 சதவிகிதமாக தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும். அதற்கென தனியாக சட்டம் இயற்ற வேண்டிய தேவையில்லை, அரசாணை மூலமாகவே செய்துவிட முடியும்” எனவும் ரவிக்குமார் எம்.பி குறிப்பிட்டார்.
நீட் தேர்வு கடந்து வந்த பாதை
2010 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்காக, “பொது நுழைவுத் தேர்வு” நடத்த பரிந்துரைத்தது. இதன்படி, 2012 ஆம் ஆண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அறிமுகமானது.
ஆனால், சில மருத்துவக் கல்லூரிகள் இந்த தேர்வை ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைக் தொடுத்தது. வழக்கின் முடிவில், வழக்கின் முடிவில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தீர்ப்பு வெளியானது.
இதனை செயல்படுத்துவதில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களுக்கு ஓராண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அ.தி.மு.க அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டமசோதாவை சமர்ப்பித்தது. ஆனால், குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை நிராகரித்துவிட்டர். தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவுகளின் அச்சத்தால், தற்போது வரை சுமார் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.