
தமிழர்களின் நாகரிக வரலாறு 5,350 ஆண்டுகள் பழமையானது என உலக அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்க தயங்குவது ஏன் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு, “கீழடி அகழாய்வுகள் தொடர்பான அறிவியல்பூர்வ முடிவுகள் இன்னும் வெளியிடப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அதன் பிறகே அங்கீகாரம் தர முடியும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, “முதலில் கீழடியில் எதுவுமே இல்லை எனச் சொன்னவர்கள், பின்னர் ஆய்வதிகாரியை இடமாற்றம் செய்தனர். பிறகு நிதி ஒதுக்க முடியாது என முடிவுசெய்தனர். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் வைத்தனர். இப்போது ஆதாரம் போதவில்லை எனத் தெரிவிக்கிறார்கள்” எனக் சுட்டிக்காட்டி அதன் வழியாக, மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழர்களின் வரலாற்றை நிராகரிக்க முயற்சிக்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
இது ஒரு வகையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வைத்திருக்கின்ற எண்ணமே பின்னணி காரணமாக இருக்கலாம் என அவர் வலியுறுத்தினார்.
“பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிடாது. வரலாறும், உண்மையும் உங்கள் அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை, மக்களிடம் சென்று சேரும்,” என தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளார்.