மதிமுகவை விட்டு துரை வைகோ திடீரென விலகியது ஏன்?

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை வைகோ

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை வைகோ தனது தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாளை நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். தற்போது மதிமுகவின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் திடீரென முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் துரை வைக்கோவிற்கும் மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இந்த தீர்மானத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கருத்த் தெரிவித்து வருகின்றனர்.

இதன் பிறகு கடந்த 12ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமணத்தில் முறைகேடுகள் நடந்ததாக சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்தக் கூட்டதிலிருந்து பாதிலேயே துரை வைகோ வெளியேறினார்.

இந்நிலையில் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை வைகோ தனது X பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்குப் போராடி வரும் ‘வாழ்நாள் போராளி’ என்கிற விருது மட்டும்தான்.

தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளைக் கொடுத்து கட்சியைச் சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியைச் சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மைச் செயலாளர்’ என்று தலைமைக் கழகப் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை.

எனவே கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்.

என்னால் இயக்கத்திற்கோ, இயக்கத் தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளைக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். என்று அதில் பதிவிட்டுருந்தார்.