தமிழ் நாட்டில் உழைப்பாளர் தினம் எப்போது அமுல்படுத்தப்பட்டது!

தமிழ் நாட்டில் உழைப்பாளர் தினம் எப்போது அமுல்படுத்தப்பட்டது!

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்புகள் மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி (மே 01) சர்வதேச அளவில், சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஒரு காலத்தில் தொழிலாளர்கள் கொத்தடிமை போலவே  வாழ்க்கையை கழித்தனர். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. தொழிலாளர்களின் உழைப்பை முதலாளி வர்க்கம் சுரண்டி வந்தது. இதற்கெதிராக பல்வேறு போராட்டங்கள் அப்போது நடந்தன.

இந்த போராட்டங்களின் விளைவாக, “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்” என்ற தீர்மானத்தை 1919ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கொண்டு வந்தது.

1948ஆம் ஆண்டு தான்  இந்தியாவில் இந்த தொழில் கொள்கை கொண்டு வரப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. ஆனால், சட்டம் வந்தாலும், தொழிலாளர்களின் உரிமை மற்றும் உழைப்பு இந்தியாவில் அப்போதும் சரிவர அங்கீகரிக்கப்படவில்லை.

1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற  பின்னர், முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அதே ஆண்டில், மே 1 — தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறைய தினமாக அறிவிக்க வேண்டும் எனத் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக 1967ஆம் ஆண்டு மே 1 அன்று தமிழ்நாடு அரசு அரசு விடுமுறை நாளாக அறிவித்தது.

பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, 1970ஆம் ஆண்டு மே 1 அன்று “ஊதியத்துடன் விடுமுறை நாள்” என அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, 1990ஆம் ஆண்டு மே 1 அன்று, இந்தியா முழுவதும் விடுமுறை நாளாக அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங் வெளியிட்டார்.

அன்று தொடக்கம் இன்று வரை மே 1 ம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக இந்தியா முழுவதும் மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது