
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது மற்றும் த.வெ.க. தலைவர் விஜயின் தேர்தல் பிரசார பயணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தால் தான் எல்லாம் செட்டில் ஆகும். அவர்கள் வருத்தத்தில் முடிவு எடுத்திருக்கலாம். காலம் கனிந்தால் எல்லாம் சரியாகும். எங்கும் சண்டை ஏற்படுவதற்கான சூழல் இல்லை. எல்லோரும் எங்களுடைய முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
மேலும், “டி.டி.வி. விவகாரத்தை மீண்டும் மீண்டும் தோண்டி பேசுவது அழகல்ல. டிடிவி தினகரன் நல்ல தலைவர். அவருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருக்காது” எனக் கூறினார்.
அரசியல் குறித்த தனது கருத்தில் அவர், “அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. அதற்காக முழு நேரம் தயாராக இருக்க வேண்டும். த.வெ.க. ஒரு சீரியஸான கட்சி எனக் கூறப்படுகிறது. அந்த வேகத்தை களத்தில் தினமும் மக்கள் காண விரும்புகிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான கட்சி என்றால் அதை களத்தில் காட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி திமுக-வுக்கு மாற்று என மக்கள் நம்புவதற்குக் காரணம், அதன் தலைவர்கள் எப்போதும் மக்களை சந்திக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சனி, ஞாயிறு மட்டும் பிரசாரம் செய்வதாக இருந்தால், அவர்கள் அரசியலை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் பார்ப்பார்கள்” என்று வலியுறுத்தினார்.
இதே நேரத்தில், த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாகவும், டிசம்பர் மாதம் வரை சனி, ஞாயிறு மட்டும் பிரசாரம் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.