உலக மக்களுக்கு போப் பிரான்சிஸ் கூறிய கடைசி செய்தி என்ன?

உலக மக்களுக்கு போப் பிரான்சிஸ் கூறிய கடைசி செய்தி என்ன

கத்தோலிக் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவால் காலமானர்

ரோமன் கத்தோலிக் திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்க தலைவரான  போப் பிரான்சிஸ் (88) பைலேட்டரல் நிமோனியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஒரு மாததிற்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகன் திரும்பினார்.

ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணாக்கான மக்கள் முன்பு சக்கர நாற்காலியில் வந்த போப், மக்களை நோக்கி கையசத்து, “ அன்புள்ள சகோதர சகோதரிகளே ஈஸ்டர் வாழ்த்துகள்” என்று கூறினார்.

ஈஸ்டர் தினத்தையொட்டி போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.

அந்த செய்தியில்,”மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை” என போப் தெரிவித்திருந்தார்.

காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த போர் “மோசமான மனிதாபிமான சூழ்நிலையை” உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது “கவலைக்குரியது” என்றும் அவர் கூறினார்.

“உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

“அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்.” எனவும் போப் கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் “நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்” எனவும் போப் கூறினார்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தி கூறிய அடுத்த நாளே போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் இறந்ததாக வாடிகன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து பல்வேறு நாட்டு தலைவர்களும் தமது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.  இந்தியாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் விதமாக நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.