
தஞ்சையில் நிருபர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கட்சி கூட்டணிகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத் தெளிவான அறிவிப்பு வெளியாகும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இதுவே பதிலாகும். ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அப்படியான நிலைமை இல்லை. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நடக்கும்.
தமிழக அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்குள் அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவுகளை எடுப்பர்” என்றார்.
மேலும், “வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் அல்லாமல் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. நீதிபதிகளும் இதற்கு துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல் நியாயமானதாகவும், மக்களுக்கான உண்மையான தேர்தலாகவும் இருக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தல் குறைந்தபட்சம் நியாயமாக நடைபெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.