
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இயங்கும் 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீர் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில், குறிப்பாக எல்லையை ஒட்டிய பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, இந்திய ராணுவம் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் அதற்குத் தகுந்த பதிலடி அளித்து வருகிறது.
இரு நாடுகளும் மாறி மாறி நடத்தும் தாக்குதல்களால் போர் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் வகித்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனடியாக மற்றும் முழுமையாக சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி’ எனப் பதிவிட்டார்
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் கூறியதாவது:“பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடி அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் உறுதியாக இருப்பதுடன், அமைதிக்காக உறுதியாக செயல்பட்டு வருகிறது.”
இந்தப் பின்னணியில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் ராணுவ இயக்குநரால் (DGMO) அழைக்கப்பட்டதாகவும், மே 10 ஆம் தேதி மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான்வழி மூலமாக நடைபெறும் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மே 12 ஆம் தேதி இரு நாடுகளின் ராணுவ இயக்குநர்களும் மீண்டும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது