
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதனை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில், மருத்துவமனைகள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகம் காணப்படும் பகுதிகளில் நகராட்சியுடன் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தவும், கொசு வளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பள்ளிகளில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறிப்பாக கை கழுவும் பழக்கம், இருமல், தும்மல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகள் குறித்து கல்வி அளிக்கவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக நடக்கும் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.