
அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசும்போது,
“செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.
அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கத்தக்கது. ஆனால் அண்ணா அல்லது எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதால், அ.தி.மு.க.வின் ஓட்டுகள் விஜய்க்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க. ஓட்டு விஜய்க்கு போவதில்லை. அவருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
விஜய், முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள், சார் என்று அழைத்தார். என்னிடம் கேட்டிருந்தால், நான் ‘சாத்தான் சார்’ என்றும், உதயநிதியை ‘மை டியர் குட்டி சாத்தான்’ என்றும் சொல்லச் சொல்லியிருப்பேன்.
மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தான் அமைச்சர் நேரு கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது.
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால், எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது” எனக் கூறினார்.