நடிகர் விஜய் மாநாடு – யார் இந்த அஞ்சலை அம்மாள் !? இவர் திமுக எம்எல்ஏவின் கொள்ளுப்பாட்டியா !??

vijay politics - anjalai ammal

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழுப்புரத்தில் இந்த மாநாடு நடக்கும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாடு நடக்கும் இடத்தில் ஏற்கனவே பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களின் கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இப்போது வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் கட் அவுட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்து பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால், அஞ்சலை அம்மாள் குறித்துத் தெரியாமல் இருக்கலாம்.

1890ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கடலூரில் பிறந்தவர் தான் அஞ்சலை அம்மாள். இவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தி 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலை அம்மாளும் தன்னை பொதுவாழ்க்கையில் இணைத்துக்கொண்டார்

சென்னையில் நடந்த ஆங்கிலேயப் படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம் எனப் பல போராட்டங்களில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

விடுதலை போராட்டங்களில் பங்கேற்றதற்காகப் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1932ம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற போது அவர் நிறைமாத கர்ப்பிணி.. அப்போது பெற்றெடுத்த மகனுக்கு ஜெயில் வீரன் என பெயர் வைத்தார். மேலும், மற்றொரு முறை விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட போது தனது 9 வயது மகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

அஞ்சலை அம்மாளை தென்னாட்டின் ஜான்சிராணி என்று மகாத்மா காந்தியடியே பாராட்டியுள்ளார்

விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் கூட விற்று, நாட்டிற்காகத் தியாகம் செய்தார்

1937ம் ஆண்டு ஒரு முறை, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரு முறை என்று மூன்று முறை அஞ்சலை அம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர்.

இப்படி நாட்டின் சுதந்திரத்திற்காகப் பெரும்பாடுபட்ட இவரது கொள்ளுப்பேரன் தான் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ மருத்துவர் எழிலன்.