முழுநேர அரசியலில் குதிக்கிறார் விஜய்!

Actor Vijay announces his entry into full-time politics, marking a significant shift in his career.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், தற்போது தனது திரைப்பட வாழ்க்கையின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். கடந்த 9 மாதங்களாக இப்படம்  படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் பணிகள் முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, விஜய் இன்று முதல் முழுநேர அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அவரது அணியைச் சேர்ந்த முக்கிய பிரிவினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

நாளை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்கிறார். மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில், அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து  உரையாற்ற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று, ஒரு முக்கிய அரசியல் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது . இது அவரின் அரசியல் களப்பிரவேசத்தின் அடுத்த கட்டமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்  மக்கள் தொடர்பை வளர்க்கும் வகையில் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்து, அரசியல் மேடையில் தனது முழுநேரப் பங்களிப்பை தொடங்கவுள்ள விஜயின் அடுத்த கட்ட செயல்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.