
உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென ஆளுநர் ரவி குற்றச்சாட்டியுள்ளார்
தமிழகத்தின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு, இம்முறை ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளதோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்.
மொத்தம் 49 பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு வழங்கப்பட்ட நிலையில், அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவாக உள்ளதாக தேசிய கல்வி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கல்வியின் மேம்பாட்டுக்காக நடைபெறும் இந்த மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் அரசால் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது,” எனக் தெரிவித்துள்ளார்
இது போன்ற ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை.ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாட்டை நடத்துவது பிடிக்கவில்லை. கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்தார்
அத்துடன்,துணைவேந்தர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காவல்துறையினர் மிரட்டல் விடுத்ததாகவும், சிலர் எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் ஆளுநர் குற்றம் சாட்டினார். உதகைக்கு வந்த சில துணைவேந்தர்களும், மிரட்டலையடுத்து மாநாட்டில் பங்கேற்கவில்லை எனவும் அதிர்ச்சி தகவலொன்றை தெரிவித்துள்ளார்
திமுக செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் இந்த விடயம் கருத்து தெரிவிக்கும் போது , “துணைவேந்தர்கள் சுயமாகவே மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். இதில் அரசின் தலையீடு இல்லை” என தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது