
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வேலைக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்கிணங்க, நேற்று 20-க்கும் மேற்பட்டோர் காட்டம்பட்டி அருகே வாய்க்கால் வேலைக்கு தேவ பாலு ஓட்டிய சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.
ஆழியார் அருகே சின்னார்பதி மலைப்பாதையில் வாகனம் சென்ற போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் நவமலையை சேர்ந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலகராஜ் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார்.
மற்ற பலர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் பலர் சம்பவத்தில் சிக்கியதால் இந்த விபத்து பொள்ளாச்சி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.