
திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது சம்பவத்தில், திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், தனது 31 செண்ட் நிலத்திற்கு அளவெடுத்து, உட்பிரிவு பட்டா மற்றும் புலப்படம் (FMB) ஆவணத்தை பெற, உரிமம் பெற்ற நில அளவர் ராஜாவிடம் அணுகினார். ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறி, முருகேசன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் ராஜாவை லஞ்சம் வாங்கிய நேரத்தில் கையும் களவுமாக கைது செய்தனர்.
இதேபோல் இரண்டாவது சம்பவத்தில், திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராபியதுல் பஸ்ரியா, தனது கணவர் பெயரில் வாங்கிய வீட்டிற்கு தனிப்பட்டா வாங்க திருச்சி கிழக்கு வட்ட அலுவலக நில அளவை உதவி ஆய்வாளர் தையல் நாயகியை அணுகியிருந்தார். தையல் நாயகி ரூ.13,000 லஞ்சம் கேட்டதாக ராபியா புகார் கொடுத்தார். இன்று போலீசார் தையல் நாயகியை லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்தனர்.
இரு சம்பவங்களும் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.