
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவருக்கும், பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதி மோதலை தூண்டும் புகைப்படங்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, வெளியூரில் தங்கியிருந்த அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு தங்களுடைய ஊருக்கு மீண்டும் வந்துள்ளனர்.
அப்போது, சமத்துவபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த சக்திகுமார் (22) என்பவர் நடத்திய பானிபூரி கடையில் நின்று பானிபூரி வாங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பும்போது, அங்கு போலீசார் வருகை தந்ததாக கூறப்படுகிறது. இதனால், சக்திகுமார் தான் தகவல் கொடுத்ததாக சந்தேகித்து, அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரவு ரஸ்தாபூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் தற்போது வசித்து வரும் இடத்திற்கு வந்த இரு சிறுவர்களும், அவருடன் பேச வேண்டுமென்று கூறி அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தங்களை போலீசில் மாட்டவைத்ததாக கூறி, சக்திகுமாரை அரிவாளால் அவரது காலில் வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர் ஓடிப்போய் தப்பிய நிலையில், அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் வந்து சேர்ந்தனர்.
போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த சிறுவர்கள் இருவரும் அரிவாளால் தாக்க முயன்றனர். இதில் போலீஸ்காரர் ரஞ்சித் காயமடைந்தார். தொடர்ந்து தகவல் அறிந்த பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் துப்பாக்கியுடன் அங்கு விரைந்து சென்று, சிறுவர்களை பிடிக்க முயன்றார்.
அப்போது அவரையும் அரிவாளால் தாக்க முயன்றதால், அவர் அருகிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டி தப்பினார். ஆனால் சிறுவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்க முயன்ற நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒரு சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்தார். மற்றொரு சிறுவன் தப்பிச் சென்றான்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த சக்திகுமார், சிறுவன் மற்றும் போலீஸ்காரர் ரஞ்சித்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குண்டு காயம் பெற்ற சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளன. தப்பிச் சென்ற சிறுவன் மீது கொலை முயற்சி, பெட்ரோல் குண்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து, இரவில் தப்பிச் சென்ற சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். குண்டு காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பெறும் மருத்துவமனை வார்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறார். டி.எஸ்.பிக்கள் சதீஸ்குமார் மற்றும் சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.