தூத்துக்குடியில்  மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!

A two-and-a-half-year-old child was found dead under suspicious circumstances in Thoothukudi, raising concerns and calls for investigation.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஷாஜினி சாரா என்ற இரண்டரை வயது குழந்தை இருந்துள்ளது.

சமீபத்தில் அருண்குமார் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சபீனா வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அடுத்த அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அழுது மயங்கி விழுந்ததை கண்ட சபீனா,  குழந்தையை  அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உடலில் மின்சாரம் தாக்கியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தையின் இந்த இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் இருந்த மின்சாதனங்கள் குறித்தும் தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.