
அரசு ஊழியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் புதிய முயற்சியாக, ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்ற பாதுகாப்புகள் கட்டணமின்றி வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இவை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வழங்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, முக்கியமான 7 முன்னோடி வங்கிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக் கணக்குகளை பராமரிக்கும் பட்சத்தில், எந்தவித கட்டணமும் இல்லாமல் பல்வேறு நலன்கள் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து விளக்கினார்.
அவரது பேச்சின் போது, அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி உயிரிழந்தால், அவர்களுக்கான குடும்ப நலத்திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோல், திருமண வயதைக் கடந்த மகள்களின் திருமணத்திற்கு நிதியுதவியும், உயர் கல்வி பயிலும் மகள்களுக்கு கல்விக் கட்டண உதவியும் வழங்கப்படும். இயற்கை மரணம் அடைந்தால்கூட ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என கூறினார்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட ஏழு முக்கிய வங்கிகள், அரசு ஊழியர்களுக்கான இந்த நலத்திட்டங்களை கட்டணமின்றி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், அவர்கள் பெறும் தனிநபர் கடன், வீட்டு கடன், கல்விக் கடன் போன்றவைகளுக்கும் சலுகை வட்டி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்த நிகழ்வில் நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த நவீன உத்திகள், அரசு ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் முக்கியமான முன்மாதிரியாக அமைந்துள்ளன.