
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மேற்கொண்டது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றவேண்டும் என்று வழக்கறிஞர் மாரீஸ்குமார் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மதுரை அமர்வு நீதிமன்றம் அரசு தரப்புக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
நகை காணாமல் போன வழக்கில் FIR ஏன் பதிவுசெய்யப்படவில்லை? என்ற நீதிபதியின் கேள்விக்கு குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னரே FIR பதிவுசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
யாருடைய உத்தரவின் பேரில் வழக்கு சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? அவர்கள் தானாகவே கையில் எடுக்கலாமா? என்ற நீதிபதியின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த தகவலைக் கொண்டு விசாரித்ததாக அரசு தரப்பில் கூறினர்.
அப்படியெனில் காவல் துறையினர் இலஞ்சம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து தானாக முன்வந்து விசாரித்து 2 மணி நேரத்தில் இலஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டியது தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் உயர் அதிகாரிகளை காப்பாற்ற விபரங்களை மறைக்ககூடாது என்றும் கூறினர்.
மேலும் புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு அல்ல சிசிடிவி பதிவிலிருந்து மறைக்கவா வெளியிடங்களுக்குச் சென்று விசாரிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அஜித்தை 2 நாட்கள் வேறு இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க யார் உரிமை கொடுத்தது? மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக மாஜிஸ்டிரேட்க்கு அனுப்பாதது ஏன்? காவல்துறை அல்லது நீதித்துறை குடும்பத்தில் இப்படி நடந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்றும் உடனடியாக எஸ்.பியை இடமாற்றம் செய்ததன் காரணம் என்ன? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் அரசியல் சாயம் பூச முயல்கின்றனர் என்று குறுக்கிட்டனர்.
மேலும் மக்களை காக்கவே காவல்துறை அவர்களே மக்களை தாக்கினால் அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமாக திகழும்போது இவ்வாறு காவல் மரணம் நிகழுவது ஏற்கத்தக்கதல்ல.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக மாஜிஸ்டிரேட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கொலையில் தொடர்புடைய அனைத்து காவல் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்டிரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும் அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்திஸ்வரன் 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்தின் உடலில் 44 காயங்கள் இருந்ததை பிரேத பரிசோதனையில் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது என்றனர்.
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜரான சக்திஸ்வரன் போலீசார் அஜித்தை தாக்குவதை கோயில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்ததாக சாட்சி கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலை வழக்கமாக திருத்தம் செய்யப்பட்டும் சிறப்புப்படையைச் சேர்ந்த 5 நபர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணையை தொடங்க வேண்டும் மேலும் அது தொடர்பான அறிக்கையை ஜூலை 8ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று கூறியதோடு ஜூலை 8ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தனர்.