
ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் போலீசார் இன்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பைசல் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடக்கிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் மகர்தோன்பு பொட்டல் பகுதியைச் சேர்ந்த பைசல் நகரில் வசிக்கும் தில்லைநாயகம் என்ற ராணி (35) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆர்.எஸ்.மங்கலம் அக்பர் தெருவை சேர்ந்த சுமார் 32 வயது பெண் ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு, தில்லைநாயகம் ராணியையும், இவருக்கு உடந்தையாக இருந்த மானாமதுரை கனகசபாபதி பிள்ளை தெருவை சேர்ந்த காளியம்மாள் என்ற சாந்தி (36), புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் சகோதரபுரம் பகுதியைச் சேர்ந்த ரங்கேஷ் (24) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், ராணி வறுமையில் உள்ள பெண்களை ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வைத்திருப்பது தெரியவந்தது. மற்ற இருவரும் பெண்களை அழைத்து வந்து இவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்
கைது செய்த போலீசார் மூவரிடமிருந்து பணம், ஆணுறைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.