வெற்றிகரமாக முடிந்த போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3வது கட்ட சோதனை 

Successful third-phase trial run of the driverless metro train between Porur and Poonamallee in Chennai.

சென்னையின் பெருநகரப் போக்குவரத்து திட்டத்தில் முக்கியமான கட்டமாக கருதப்படும் போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

முன்னதாக நடந்த இரண்டு சோதனைகள் UP Line பாதையில் (பூந்தமல்லி–போரூர்) நடத்தப்பட்டன. இப்போது Down Line பாதையில் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்ற மூன்றாவது கட்ட சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சோதனை, ஆரம்ப கட்டமாக இருப்பதால் ரெயில் 20 முதல் 25 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. அடுத்த கட்டத்தில் இதே பாதையில் 40–50 கி.மீ. வேகத்தில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ பாதை முழுவதும் 9.5 கி.மீ. தூரம் கொண்டது. இதில், போரூர் முதல் பூவிருந்தவல்லி வரை மொத்தம் 10 மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில், அதனைத் தொடர்ந்து போரூர்–பவர்ஹவுஸ் மற்றும் ஆலப்பாக்கம்–சென்னை வர்த்தக மையம் இடையிலான மெட்ரோ பணிகளும் அடுத்தாண்டு ஜூலைக்குள் முடிவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் அறிவித்துள்ளார்.

அதேபோல், கோடம்பாக்கம்–பனகல் பார்க் இடையிலான சுரங்கத் தோண்டும் பணிகளும் வருகிற இரண்டு மாதங்களில் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மெட்ரோ திட்டம் முற்றிலும் செயல்பாட்டில் வந்ததும், மேற்கு சென்னை பகுதிகளின் போக்குவரத்து சுமை மிகுந்தளவில் குறையும் என நம்பப்படுகிறது.