
கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவிலில், உண்டியல் பணத்தை திருடிவிட்டு அதே இடத்தில் தூங்கிய நிலையில் ஒரு வாலிபர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்ட நிலையில், மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்குள் வந்தபோது கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போனதுடன், அதே இடத்தில் ஒரு வாலிபர் தூங்கிக் கொண்டிருந்தார்.
தகவல் தெரிவிக்கபட்டதும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கூடி அந்த நபரை எழுப்பி விசாரித்தனர். விசாரணையில், காரைக்காலைச் சேர்ந்த 42 வயதான சின்னையன் என்பவர் தான் திருட்டு செய்ததும், பின்னர் மழை காரணமாக போதையில் அயர்ந்து அங்கேயே தூங்கி விட்டதும் தெரியவந்தது.
சின்னையன், முன்பே பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவராகவும், தற்போது கோவையில் கட்டிட வேலை செய்து வந்தவராகவும் அடையாளம் காணப்பட்டார். கோவிலின் உண்டியலை இரும்புக் கம்பியால் உடைத்து, ரூ.8,250 தொகையை திருடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகியின் புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் சின்னையனை கைது செய்து, திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
திருடவந்த இடத்தில் போதைமயக்கத்தில் தூங்கியதால் சிக்கிய இந்த சம்பவம், கோவை நகரத்தில் தற்போது பேசப்படும் முக்கியமான விசயமாகியுள்ளது.