‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!

"Young woman alleges she was pushed from terrace over dowry demand; files complaint from ambulance."

வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர் பாபாவின் மகன் காஜா ரபீக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திலிருந்து வரதட்சணை கோரிக்கைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

காஜா ரபீக் மற்றும் அவரது பெற்றோர், தொழில் தொடங்க நர்கீஸின் தந்தையிடம் பணம் கேட்டு, தர மறுத்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், வரதட்சணை தர மறுத்ததால் கடந்த ஜூன் 3 ஆம் தேதி மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும் நர்கீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதில், இடுப்பு மற்றும் இரு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தொடக்கத்தில் இது தவறி விழுந்ததாகக் கூறி புகார் பதிவு செய்யப்படவில்லை என்றும், சில நாட்களுக்கு பிறகு மயக்க நிலையிலிருந்து மீண்ட நர்கீஸ் உண்மையை பெற்றோரிடம் சொன்னதாகவும் தெரிகிறது.

ஆனால், இதற்காக காவல்துறையில் கடந்த மாதம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நர்கீஸ், ஆம்புலன்ஸிலேயே வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவி காவல் ஆய்வாளர் மகனின் இந்தக் கொலை முயற்சி புகாரை வேலூர் போலீசார் ஒருமாதமாகத் தவிர்த்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.