
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றிய காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் விவகாரத்தில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வழக்கில் ஆலம்பட்டி பேராசிரியை நிகிதா மீது நகை திருட்டு உள்ளிட்ட மோசடி வழக்குகள் தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், திருவள்ளூர் கிழக்கு பாஜக மாவட்ட செயலாளரான ராஜினி, “என் புகைப்படத்தை நிகிதா பெயரில் சமூக வலைதளங்களில் தவறாக பரப்புகிறார்கள்” எனக் கூறி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ராஜினி கூறியதாவது: “என் பெயர் ராஜினி, பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர். என் மண் என் மக்கள் யாத்திரையில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் இணைத்து போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.
இதனைச் செந்தில் சரவணன் என்ற நபர் தனது பேஸ்புக், டுவிட்டர் ID மூலம் பரப்பி வருகிறார். அவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளேன். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் போராட்டம் நடத்த நேரிடும்” என Raja Rajini எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பெண் நிர்வாகி புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.