தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர் அப்பாவு

"Speaker Appavu says there's no reason to fear the Tamil Nadu Victory Party."


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:

“நடிகர் விஜய் அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. அவர் சினிமாவில் பேசுவது போலவே அரசியலிலும் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக உள்ளது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதற்காக அமித்ஷா, குஷ்பு, புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் பேசப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க. தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர், முதலமைச்சர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும் கவனத்துடனும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியமில்லை. யாரும் யாருக்கும் தமிழ்நாட்டில் பயப்படவில்லை. விஜய் போல ‘தலைவா’ பட பிரச்சனைக்காக 3 நாட்கள் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல.

மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். கவர்னர் எதனையும் அறியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை மட்டுமே பேசுகிறார். குட்டம் முதல் ராதாபுரம் வரையிலான ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்சனை, சட்டமன்றம் கூடும்போது தீர்வு காணப்படும்,” என்று அவர் தெரிவித்தார்