
தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் நேற்று சட்ட பேரவையில் கோரிக்கை வைத்திருந்தார்.
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிந்தனை செல்வன் கோரிக்கையின் அடிப்படையில், ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது என்றும்,
ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடு சொல்லாக மாறி இருப்பதாலும், காலணி என்ற அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலும் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன், முதல்வர் அறிவித்துள்ள இந்த நாள் வாழ்நாளில் பொன் நாள். இந்த நாள் சமூக நீதியின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
இனி காலம் சொல்லும். சமூக நீதி என்றால் ஸ்டாலின், சமத்துவம் என்றால் ஸ்டாலின், சகோதரத்துவம் என்றால் ஸ்டாலின் என்று காலம் சொல்லும் என்று மனம் நிறைந்து தெரிவிக்கிறேன் என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதயடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் பாமக, சிபிஐ, தவாக உள்ளிட்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த அறிவிப்பை வரவேற்று பேசினார்கள்.