தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu Chief Minister M.K. Stalin urges the Union Government to release the state's rightful financial allocations.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் ஒன்றிய அரசை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு மற்றும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால், இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதையே தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்தியக் குடும்பங்கள் ஏராளமான தொகையை சேமித்திருக்கும்.

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநிலங்களின் பங்கிலிருந்து தான் வருகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைத்து வருகிறது. இதனை வெளிப்படுத்துவது எனது கடமையாகிறது.

இதனுடன், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியை வழங்காமல் அநீதி செய்கிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் காரணத்தால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது.

மாநிலங்களின் உரிமைகளை பறித்து, தங்கள் மக்களுக்காக நிற்கும் அரசுகளை தண்டிப்பதன் மூலம் இந்தியா முன்னேற முடியாது. கூட்டாட்சிக் கொள்கைக்கு மதிப்பு அளித்து, தமிழகத்துக்கு உரிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்