மக்களின் தீர்ப்பு 2026 இல் ஆணித்தரமாக ஒலிக்கும் – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran declares that the people’s decisive verdict will be heard in 2026.

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., “மக்களின் தீர்ப்பு 2026இல் ஆணித்தரமாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக மத்திய அரசு நிதி விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று உண்மையற்ற பரப்புரையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதைப் போல, 2014 முதல் வசூலிக்கப்பட்ட வரியை விட அதிகமாகவே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தை விட அனைத்து துறைகளிலும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உலகறிந்த உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதரப்பழசான போலி இந்தி திணிப்பு நாடகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு திமுக நடத்தும் என்று கேள்வி எழுப்பிய அவர், ஆயுதப்படைக்கான தேர்வுகளில் தொடங்கி மருத்துவப் படிப்பு வரை தமிழ் மொழியில் கொண்டு வந்து உளமாற தமிழைப் போற்றிவரும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசை தங்கள் அரசியல் தேவைகளுக்காக பழி சுமத்துவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

தமிழ் பொக்கிஷமாம் திருக்குறளின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய் என்றும், வழக்கமாக நிபுணர் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய தொல்லியல்துறையின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிப்பது அநியாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழக இரயில்வே துறைக்கு ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும், ஆனால் 2025-2026 பட்ஜெட்டில் மட்டுமே 7.5 மடங்கு அதிகமாக ரூ. 6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் பட்டியலிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் 1,302 கி.மீ. புதிய இரயில்தடங்கள் உருவாக்கப்பட்டு ரூ. 33.467 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

வக்பு வாரியத்தில் பெண்கள், ஷியா, பாஸ்மண்டா, போஹ்ரா, சன்னி அஹாகானி என அனைத்து இஸ்லாமியருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது முறையா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை எதிர்கட்சிகளுக்கு எதிரானவை என குற்றஞ்சாட்டும் திமுக, அவை மத்திய அரசின் ஆளுகைக்குள் வராத சுயாதீன அமைப்புகள் எனும் அடிப்படையை நினைவில் கொள்ளாதது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

திமுகவினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்தால், அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது திசைதிருப்பும் நடவடிக்கையே என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆக, மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத ஒருதலைப்பட்ச அரசியலின் வெளிப்பாடே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தங்கள் ஆட்சியின் தவறுகளைத் தேவையற்ற தீர்மானங்கள் மூலம் திரையிட்டு மறைக்க முயற்சித்தாலும், மக்களின் தீர்ப்பு 2026-ல் ஆணித்தரமாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் நிறைவு செய்துள்ளார்.