
சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுதந்திரத்தை தலைவர்கள் பெற்றுக் கொடுத்ததன் அர்த்தம் இன்று மாறி விட்டது. கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை இளம் தலைமுறை உணர வேண்டும். நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி வாக்குரிமை, வாக்குத்திருட்டு குறித்து மாநாடு நடத்துகிறது. அதில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பேச உள்ளனர்” என்றார்.
மேலும், “பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஏற்கனவே கெடு கொடுத்துவிட்டனர். அந்த கூட்டணி மூழ்கும் கப்பல் போன்றது. அதிலிருந்து டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., இன்று செங்கோட்டையன் என பலர் விலகி விட்டனர். இன்னும் பலர் வெளியே வரப் போகிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியை ஏற்க மாட்டார்கள் என்பது எதார்த்தமான உண்மை” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் , “பா.ஜ.க. உறவாடி கெடுக்கும் கட்சி. பல மாநிலங்களில் சித்து விளையாட்டு நடத்தியுள்ளார்கள். இப்போது அதையே அ.தி.மு.க.வில் தொடங்கியுள்ளனர். அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும். திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் மந்தம் நிலவுகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஏற்றுமதி குறைந்துள்ளது. மக்கள் விலை உயர்வால் அவதிப்படுகின்றனர். ராகுல் காந்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் என்று கூறினார். இன்று தான் அவர்கள் குறைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேது ராமன், மாநில நிர்வாகிகள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ. வாசு, சுரேஷ் பாபு, மகிளா காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் கானப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டு துறை பொதுக்குழு, நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட நாட்டுப்புற பாடகரும், காங்கிரஸ் மாநில கலைப்பிரிவு துணைத் தலைவருமான கலைமாமணி தாராபுரம் கலாராணி, செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.