திமுக அரசின் ஏவல்படை போல லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

திமுக அரசின் ஏவல்படை போல லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும்  உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 இந்த சோதனைகள் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 20 இடங்களில், மற்றும் நீதிபதி என்பவரின் சொந்த வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஒருங்கிணைந்து நடந்து வருகின்றன.

சேவூர் ராமச்சந்திரன் 2011–2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, அநியாய சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்குகளின் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருப்பதாக  அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்த சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்துடன் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது திமுக அரசின் ஏவல் படை போல செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் சேவூர்ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. 

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல் துறையை அனுப்பியுள்ளார்.


டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகள், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்”  எனத் தெரிவித்துள்ளார்.