
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கமாக இருந்ததால், அங்கு பூசாரியாக இருந்த அசோக்பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டது. குடும்ப பிரச்சினைகளை பகிர்ந்து பேசிவந்த இளம்பெணிடம், ‘தீய சக்திகளை அகற்றி ருத்ராட்சம் மாலை வாங்கி தருகிறேன், பிரச்சினைகள் தீரும்’ என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதன்படி, பூசாரி அசோக்பாரதி இளம்பெண்ணை வடபழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் பூட்டியிருந்ததால் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி அங்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருந்தபோது பூசாரி இளம்பெணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தெற்கு மண்டல இணை கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் பூசாரி அசோக் பாரதி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே நேரத்தில், இளம்பெண்ணுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கணவர் தன்னை தாக்கி செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அதனை வைத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பூசாரி அசோக் பாரதி வடபழனி போலீசில் வேறு புகார் அளித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.