
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாயனூர் அருகே வளையல்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் நாகராஜன் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், ‘‘கரூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது குரல் பெண் குரல் போல் இருப்பதால் பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியர் செந்தில்குமார் அவமரியாதையாக, ஆபாசமாக பேசுகிறார். தொடக்கூடாத இடத்தில் தொடுவதால் மன உளைச்சல் ஏற்பட்டு படிப்பில் கவனம் செல்லவில்லை,” என்று கூறியுள்ளார்.
மேலும், ‘‘இதுபற்றி புகார் அளித்தால் பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டி வருகின்றார். நான் பள்ளியின் அவமானம் என்றும் சொல்கிறார். இதனால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கிறேன். எனவே இதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மனுவில் தெரிவித்தார்.
மாணவர் மனுவை பெற்ற அதிகாரிகள் இது குறித்து விரைவில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.