
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று அவர் முழு போதையில் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். நிற்க கூட முடியாத நிலைமையில் பள்ளிக்குள் மல்லாந்து படுத்து கிடந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போதையில் கிடந்த அவரை எழுப்பி, குடிக்க தண்ணீர் கொடுத்து ”பள்ளிக்குள்ள இப்படி போதையில் வந்தது நியாயமா? பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்?” என கேள்வி எழுப்பினர்.
இந்த காட்சி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட உடனே வைரலானது. சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோக்கியராஜை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியில் ஆசிரியர் முழு போதையில் மல்லாந்து கிடந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சி அளித்துள்ளது.