
சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி மீது முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவரை பல்கலைக்கழக நிர்வாகக்குழு சஸ்பெண்ட் செய்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் பெரியசாமி மீது போலி அனுபவச் சான்றிதழ்கள், நிர்வாக முறைகேடு, மாணவர்களை பி.எச்.டி. ஆய்வில் தடுக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், 19 முனைவர் பட்ட ஆய்வாளர்களை பயில விடாமல் செய்தது, சாதி பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியது, அலுவல் பணியாளர்களிடம் தரக்குறைவாக பேசியது, பேராசிரியர்களை அவமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த புகார்களை விசாரிக்க, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் டீன் மணியன் தலைமையில், சிண்டிகேட் உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி மற்றும் வெங்கடாஜலம் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில் பேராசிரியர் பெரியசாமி மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, பல்கலைக்கழக விதிகளின்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகக் குழு, பேராசிரியர் பெரியசாமியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரியசாமி சாட்சியங்களை மிரட்டி கலைக்கவோ, ஆவணங்களை அழிக்கவோ வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, முன் அனுமதியின்றி சேலத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என நிர்வாகக் குழு எச்சரிக்கை வழங்கியுள்ளது.