தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்பு!

"Supreme Court announces important judgment in 'The Life' film controversy."

‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன்   ‘த‌மிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டதையடுத்து  கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.

இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த ஜூன் 3-ம் தேதி க‌ர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக் கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்.அதனை கமல்ஹாசன் ஏற்கவில்லை. இதனால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

இதனையடுத்து சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் தக் லைஃப் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தை கன்னட அமைப்பினர் வாய்மொழி அச்சுறுத்தல் மூலம் கர்நாடகாவில் வெளியிட முடியாமல் தடையை ஏற்படுத்தியுள்ளனர். கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துகளால் அந்த திரைப்படத்துக்கு சட்டரீதியான தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் சட்டத்துக்கு புறம்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என‌ கூறியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “அந்தக் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட, கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.  இந்த விவகாரத்தில் அந்த நீதிமன்றத்துக்கு எந்த வேலையும் கிடையாது”என்று கடுமையாக தெரிவித்துள்ளது.

மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நடைமுறைகள் அனைத்தும் சட்டத்துக்கேற்ப நடைபெறவேண்டும். சிலரின் விருப்பங்கள், வெறுப்புகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படக்கூடாது”எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், “திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அரசியல் மயமாக்க கூடாது. இது தொடர்பான மாநிலத்தின் நிலைப்பாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும்” என உச்சநீதிமன்றம் கூறி, வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.