தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயல்  சட்டவிரோதமானது என்றும். மேலும் அந்த 10 மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்கியும், உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பனிப்போர்  சூழல் நிலவி வந்தது. குறிப்பாக ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு இந்த போக்கு மிகவும் தீவிரமானது .

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதகளுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவதாக ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தது தமிழ் நாடுஅரசு. 

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்வதிலா மற்றும் மாகதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் தொடர் இறுதி விசாரணைக்கு பிறகு, பிப் 10ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.

தீர்ப்பின் விவரம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது முடிவெடுக்க, சட்டப்பிரிவு 200-ன் கீழ் உள்ள மூன்று வாய்ப்புகளை தான் ஆளுநர்  பயன்படுத்த முடியும்.

1. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது

2.மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது

3. குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு முதல் முறையாக மசோதா அனுப்பப்படும் போது மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சட்டப் பேரவையில் மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. மேலும் அவர் ஒப்புதலை வழங்கியே ஆக வேண்டும்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு “தன்னிச்சையான அதிகாரம்(Veto) கிடையாது. இரண்டாவது முறையாக மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. மேலும் இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. மீண்டும் அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போது மட்டும் தான் இதற்கு விதிவிலக்கு உள்ளது.

ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு அரசியலமைப்பில் குறிப்பிடபடவில்லை என்பதால், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். என்று நீதிபதி பர்வதிலா குறிப்பிட்டார்.

“ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. சட்டப் பிரிவு 200ன்கீழ் ஆளுநருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது. ஆளுநர் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் இந்த  நீதிமன்றம் வாயிலாக தெளிவுபடுத்துகிறோம்” என்றார் நீதிபதி பர்வதிலா.

மேலும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க அல்லது  ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்துகிறது என்றனர்.

“10 மசோதாக்களையும் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல, ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப்(சட்டப்பிரிவு 143) பயன்படுத்தி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

10 மசோதாக்கள் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதை மாற்றி, மாநில முதல்வர்களே வேந்தர்களாக இருக்க வழிவகை செய்யும் வகையில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் சட்டத்தையும் திருத்துவதற்கான மசோதாக்கள்தான் அந்த 10 மசோதாக்கள் ஆகும்.

  • தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா
  • தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி மு.க.ஸ்டாலின் கருத்து

உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாக கூறினார்.

ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்.

தற்போது இந்த வழக்கில் தமிழ் நாடு அரசின்  வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.