
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி., ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் முதல் டிரான்ஸ்போர்ட் அதிபர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து மாவட்ட விஜிலன்ஸ் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
முறையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், அலுவலக ஊழியர்கள் ஒப்புதல் அளிக்காமல், ஏஜெண்டுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கே அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் இணைந்து ரகசிய வாட்ஸ்அப் குழுவின் மூலம் அலுவலகத்தை கட்டுப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, மாவட்ட விஜிலன்ஸ் டி.எஸ்.பி. பீட்டர் பால் துரை தலைமையிலான குழு, 11-ஆம் தேதி பிற்பகல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ஏஜெண்டுகள், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் வாகனங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
இந்த சோதனையில், அலுவலகத்தின் பல்வேறு ஆவணங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ₹1,52,100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்தையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகளிடம் விஜிலன்ஸ் போலீசார் இரவு வரை விசாரணை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.