காதல் தொடர்பில் இளைஞரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Sub-Inspector transferred for allegedly abetting youth’s suicide over love affair

காதல் தொடர்பில் இளைஞரை வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வந்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், சங்கீதா என்ற பெண்ணுடன் காதலித்து வந்தார். பின்னர் ஓட்டுநர் வேலைக்காக சரத்குமார் குவைத் சென்றார். அந்த இடைவெளியில் சங்கீதா, வைத்தீஸ்வரன் கோவில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சரத்குமார், தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு குவைத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், சரத்குமாரை காதலிப்பதாக கூறி சங்கீதா 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாகவும், வீடியோ கால் மூலம் எஸ்.ஐ. சூர்யமூர்த்தி அவரை மிரட்டியதாகவும் அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.