
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
“ஏறுனா ரயிலு… இறங்குனா ஜெயிலு… போட்டா பெயிலு…” என ரைமிங் வசனம் பேசி ஆசிரியர்களை திட்டிய வீடியோ அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கடந்த ஜூன் 13ஆம் தேதி நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் அதே ப்ரீத்திவ் (19) கைது செய்யப்பட்டுள்ளான். தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்றவர் ஏடிஎம் பணம் நிரப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவரிடம் நாகர்ஜுன் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று செம்பட்டி ஏடிஎமில் ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாகர்ஜுன் புகார் கொடுத்தார்.
செம்பட்டி போலீசார் விசாரணையில் நாகர்ஜுன் தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததும், கத்தி காட்டி மிரட்டி கொள்ளை நடந்ததாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதன் பேரில் நாகர்ஜுன், சுரேந்தர், முகமது, ரிதீஷ், கார்த்திகேயன் மற்றும் ப்ரீத்திவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தில் சிக்கிய ப்ரீத்திவ் கூறிய அதே வீர வசனம் “ஏறுனா ரயிலு… இறங்குனா ஜெயிலு…” தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.