
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே மாணவி சண்முகபிரியா கர்ப்பத்தை கலைத்ததையடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியை அடுத்த கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகள் சண்முகபிரியா (19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இதே பகுதியில் உறவினராக உள்ள சிறுவனுடன் அவர் நெருக்கமாக பழகியதால் 5 மாத கர்ப்பம் அடைந்தார். இதை ஆரம்பத்தில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சண்முகபிரியாவின் கர்ப்பத்தை கலைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டுக்கு வந்த அவர் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால் முதலில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகபிரியா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படும் நர்சும் உதவியாளரும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியுடன் பழகிய சிறுவனையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.