
மாதவிடாய் ஏற்பட்டதையடுத்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியொருவர், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மாணவிக்கு நடந்த கொடுமையை மாணவியின் தாய் வீடியோவாக பதிவு செய்து அந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மாதவிடாய் வந்த மாணவி, ஏப்ரல் 9 தேதி அன்று முழு ஆண்டு தேர்வு என்பதால் தேர்வை எழுத பள்ளிக்கு வந்திருந்த போது பள்ளி நிர்வாகத்தினர் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்து, வகுப்பறையின் வாசலில் தனியாக அமர வைத்து தேர்வு எழுதுமாறு கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தை மாணவியின் தாய் எதிர்த்து, பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கேள்வி எழுப்பிய போது , “எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும்; பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்,” என பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன.
மேலும் மாணவியின் பெற்றோர் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்ததையடுத்து, கல்வித்துறையும், காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியது.
பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தி மற்றும் கண்காணிப்பாளர் சிவகாமியிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்
மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான மற்றும் சாதாரணமான உடல் நிலை என்று கற்பிக்க வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே இதுபோன்ற பிற்போக்கு எண்ணங்களால் மாணவிகள் அவமதிக்கப்படுவது கவலையை ஏற்படுத்தும் நிலையாக பார்க்கப்படுகின்றது
மாணவிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.