
கடந்த ஆண்டு சாதி தொடர்பான பிரச்சனையால் ஆளான மாணவர் சின்னதுரை மீது மீண்டும் 5 பேர் கொண்ட சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் சின்னதுரை கடந்த ஆண்டு சாதிய பாகுபாட்டின் காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி தற்போது பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நெல்லை கொக்கிரக்குளம் பகுதி அருகே தனியாக சென்ற சின்னதுரை மீது 5பேர் கொண்ட மர்ம் கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நெல்லை காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நண்பர்களின் அழைப்பை ஏற்று மாலை 6:15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
சுமார் 7:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்ட சின்னதுரை, மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியுள்ளதாகவும், மேலும் தனது அலைப்பேசியை பறித்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்”. என குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக்காக இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்துவிட்டதாக கூறினார், இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடந்து வருவதாக திருநெல்வேலி மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்திய நடத்தியுள்ளாதா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.