பென்சில் தர மறுத்ததால் மாணவனுக்கு அரிவாள் வெட்டு! – சக மாணவன் செய்த கொடூரம்!

பென்சில் தர மறுத்ததால் மாணவனுக்கு அரிவாள் வெட்டு! - சக மாணவன் செய்த கொடூரம்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டி உள்ளார். மேலும் தடுக்க வந்த ஆசிரியரும் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இருவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் ஆய்வு நடத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; “ சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனும், பாதிக்கப்பட்ட மாணவன் இருவருமே நண்பர்கள், கடந்த மாதம் மாணவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் பென்சில் வாங்கியுள்ளனர். இதில் ஒருவரின் பென்சில் காணாமல் போனதால் இருவருக்கும் இடையில் அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் தொடர்பாக இரு மாணவர்களையும் அழைத்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

தன்னை அனைவர் முன்னிலையிலும் அவமானபடுத்திவிட்டதாக  நினைத்த மாணவன், பள்ளிப் புத்தகப் பையில் அரிவாளை மறைத்து எடுத்து வந்து வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே சக மாணவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் தடுக்க சென்ற போது அவரையும் அரிவாளால் தாக்கி உள்ளார். இதன் பிறகு இருவரும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது இருவரின் உடல்நிலையும்  நன்றாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர் சிறுவர் என்பதால், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம் என காவல் உதவி ஆணையர் கூறினார்.


இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். அதில் சிறுவனை வெட்டி விட்டு சக மாணவர் தானாக காவல் நிலையத்தில் சரணடைந்தாக காவல் துறையினர் கூறுகின்றனர், ஆனால் அரிவாளால் வெட்டிய பிறகு தனியாக காவல் நிலையம் செல்லும் அளவுக்கு அவருக்கு வயதில்லை என்பதால், இதன் பின்னணி குறித்து காவல் துறையினர் முறையாக விசாரிக்க வேண்டும் என கூறினர்.

இதுகுறித்து காவல் உதவி ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இச்சம்பவத்தின் பிறகு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பைகளை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.